

திருவாரூர்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தனது உயரம் அறிந்து பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி, அதில் சுமார் 700 பேர் உயிரிழந்த பிறகுதான், அந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், தமிழக முதல்வர் அதை பெருந்தன்மையுடன் நிறுத்தி வைத்துள்ளார். தமிழக அரசு ஜனநாயகப்பூர்வமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.
அதேநேரம். இந்த 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திமுக கூட்டணிக் கட்சிகள் குருட்டுத்தனமாக எதிர்க்கக் கூடாது என வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். முதல்வரே எங்களது கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், விக்கிரமராஜா தனது உயரம் அறிந்து பேச வேண்டும்.
விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு தேவையில்லை என தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். தூத்துக்குடியில் கிராமநிர்வாக அலுவலரை கொன்ற வழக்கில் அனைவரையும் உடனடியாக கைது செய்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றார்.