வெளிமாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதி செய்து தராத 47 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வெளிமாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதி செய்து தராத 47 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளைச் செய்யாத 47 கட்டுமான நிறுவனங்கள் மீதுசட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும்கட்டுமானப் பணிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிர்வாகத்தினரால் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள தங்கும் விடுதிகளிலும், கட்டுமானப் பணியிடங்களிலும் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெற்று வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களில் 152 கட்டுமானப் பணியிடங்கள், தொழிலாளர்களின் தங்கும் விடுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முரண்பாடுகள் காணப்பட்ட 47 கட்டுமான நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in