

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் அதிகமான இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. இதற்கான களப்பணி மே மாதம் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. அதில், இறந்தவர்களின் பெயர்கள்,இரட்டைப் பதிவுகள் ஆகியவை நீக்கப்படுகின்றன. அதேபோல், ஒரு முகவரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறிச் சென்றவர்களின் பெயர்கள் ஒரு இடத்தில் நீக்கப்பட்டு மற்றொரு இடத்தில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதது. ஒரு வாக்காளர் பெயர் பல்வேறு இடங்களில் இருப்பது தொடர்கிறது. இப்பிரச்சினைகளை தீர்த்து, வாக்காளர் பட்டியலை சரி செய்யும் வகையில் பல்வேறுநடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: வாக்காளர்களின் புகைப்படங்கள் அடிப்படையில் அடையாளம் காணும் வகையில், மென்பொருள் துணையுடன், ஒரு இடத்தில் மட்டுமே ஒரு வாக்காளரின் பெயர் இருக்கும் வகையில் உறுதி செய்யப்படுகிறது. அதன்படி, எந்த இடத்தில் தனது பெயர் இருக்கவேண்டும் என்பதை வாக்காளரிடமே கேட்டு அதன்பேரில், வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்வு செய்வார்கள். அதன்படி மற்ற இடங்களில் இருக்கும் அவரது பெயர் நீக்கம் செய்யப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் தேர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மே மாதத்தில் களப்பணிகளை அவர்கள் தொடங்குவார்கள்.
தொகுதிக்குள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படங்கள் மென்பொருள் உதவியுடன் சரிபார்த்து அதன்படி இரட்டை பதிவுகள் நீக்கப்படும். இரட்டை பதிவுகள் அடிப்படையில் சுமார் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.