Published : 27 Apr 2023 04:00 AM
Last Updated : 27 Apr 2023 04:00 AM
கோவை: கனிம வளக் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால்தான் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டுள்ளார் என்று வரும் செய்திகள், தமிழகத்தில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மணல் கொள்ளையர்களுடன் அதிகார வர்க்கம் கூட்டணியில் உள்ளது. அதனால்தான், லூர்து பிரான்சிஸ் போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் இழக்க நேரிடுகிறது.
கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், இட மாறுதல் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்துவரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த கொடியவர்களை உடனடியாக கைது செய்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT