வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கெளதம்(31). இவரது மனைவி குறிஞ்சி மலர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்த குறிஞ்சிமலருக்கு நேற்று முன்தினம் வால்பாறை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்கு பின்னர் குறிஞ்சி மலருக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததாலும், ரத்தப்போக்கு ஏற்பட்டதாலும் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். ரத்தப் போக்கு அதிகரித்ததால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் குறிஞ்சி மலருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அரசு மருத்துவர் பிரசவத்தின் போது உடனில்லை என்றும் புகார் தெரிவித்த குறிஞ்சி மலரின் உறவினர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஏஎஸ்பி பிருந்தா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதையடுத்து குறிஞ்சிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறிஞ்சி மலரின் கணவர் கெளதம் அளித்த புகார் மனு குறித்து விசாரிக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in