Published : 27 Apr 2023 04:07 AM
Last Updated : 27 Apr 2023 04:07 AM

சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பொருட்கள் பறிமுதல்

சேலம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் ஆய்வு செய்தார்.

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தயாரிப்பு தேதி குறிப்பிடாத ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சேலம் அரசு மருத்துவ மனையில் இயங்கிவரும் ஆவின் பாலகத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி ராஜா, சிவலிங்கம் அடங்கிய குழுவினர் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆவின் பாலகத்தில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பன் 60 பாக்கெட்டுகள், முந்தைய தேதியிட்ட பிரட் பாக்கெட்டுகள் 16 எண்ணிக்கை, பொட்டல விவரங்கள் குறிப்பிடாத பாதாம் கீர் 200 மிலி அளவு பாட்டில்கள் 36 எண்ணிக்கை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட செய்தித் தாள்கள் ஆவின் பாலகத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறிய பொருட்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, ஆவின் பாலகத்துக்கு ரூ. 2,000 அபராதம் விதித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும், பாதாம் கீர் உணவிலிருந்து உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக முடிவு வெளியானதும், இது சம்பந்தமாக மேல் நடவடிக்கை தொடர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆவின் பாலகத்தில் விதிமுறை மீறி வைத்திருந்த உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x