

ஓசூர்: ஓசூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த ஆலங்கட்டி மழையால் வெற்றிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர், கெலமங்கலம், அஞ் செட்டி, சூளகிரி பகுதிகளில் விவசாயிகள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்துள் ளனர். தற்போது, முகூர்த்த நாட்கள் என்பதால் சந்தையில் வெற்றிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், ஒருகட்டு வெற்றிலை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது.
இதில், வெற்றிலை கொடிக்காலில் வெற்றிலை மீது விழுந்த ஆலங்கட்டிகளால் இலைகள் கருப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இவற்றை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலையும், உற்பத்தி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெற்றிலை விவசாயிகள் சிலர் கூறியதாவது: திருமணம் மற்றும் கோயில் திருவிழா விற்பனையை மையமாகக் கொண்டு வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த சில நாட்களாகச் சந்தையில் வெற்றிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஆலங்கட்டி மழையால் வெற்றிலையில் கருப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் விழுந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெற்றிலைக்கு நல்ல விலை கிடைத்தும், வெற்றிலை அறுவடை கிடைக்காததால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.