திடீரென ஆட்டோ குறுக்கே புகுந்ததால் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து
சென்னை: ஐசிஎப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் 7பயணிகள் காயம் அடைந்தனர். சென்னை பிராட்வேயில் இருந்து கொரட்டூர் நோக்கி அரசு பேருந்து (தடம் எண் 35) நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ஐசிஎப் குன்னூர் நெடுஞ்சாலை வழியாகச் சென்றபோது திடீரென பேருந்தின் குறுக்கே ஆட்டோ ஒன்று புகுந்தது.
ஆட்டோ மீதுமோதாமல் தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர் தேவராஜ் (51) உடனே பிரேக் பிடித்துள்ளார். ஆனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த ரூபினி (20), மாலினி (53),ராணி (66), சந்தானம் (39) உட்பட 7 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுபோலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த பயணிகளை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
