“அரசு பணியாளர்களின் மன உறுதியை கடுமையாக பாதிக்கும்” - விஏஓ படுகொலை குறித்து இந்திய கம்யூ. கருத்து

இரா.முத்தரசன் | கோப்புப் படம்
இரா.முத்தரசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “கிராம நிர்வாக அலுவலர் படுகொலை சம்பவம் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது; குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (55) பணியில் இருந்தபோது, பட்டப்பகலில் அவரது அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அவரை விரட்டி, விரட்டி வெட்டிப் படுகொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மணல் திருட்டுக் கும்பல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவர்களது சட்டவிரோத, சமூக விரோதச் செயல்களுக்கு உடன்படாத, ஒத்துப்போகாத அரசுப் பணியாளர்களை தாக்குவது, படுகொலை செய்வது அரசு கட்டமைப்பை நிலைகுலைக்கும் கடுமையான குற்றச்செயலாகும். படுகொலைக்கு ஆளான கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது உயிர் பலி கொடுத்துள்ள, அந்தக் குடும்பத்தை அரவணைத்து ஆறுதல்படுத்தும் நல்ல அணுகுமுறைதான்.

ஆனால், அரசின் சட்ட விதிகளை பின்பற்றி, பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பணியாளர்களின் மன உறுதியை கடுமையாக பாதிக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மணல், மண் போன்ற இயற்கை வளக் கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமல்ல வேறு பல பிரிவுகளிலும் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் வெளிப்பட்டு வருகின்றன என்பதை அரசு கவனிக்க வேண்டும்.

காவல் துறை குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி மேலும் தீவிரமாக வேண்டும். எந்த நிர்பந்தங்களுக்கும், அழுத்தங்களுக்கும் பணிந்து விடாமல் தடுக்கும் உறுதியான நடவடிக்கை எடுத்து, குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in