Published : 29 Sep 2017 12:08 PM
Last Updated : 29 Sep 2017 12:08 PM

திருத்தணியில் 3000 ஆண்டுகள் பழமையான பேழை, தாழி கண்டுபிடிப்பு

திருத்தணியில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஈம பேழை மற்றும் ஈம தாழிகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரி வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பழமையான பொருட்கள் புதைந்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, தமிழக தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் பூண்டி பழங்கால அகழ்வைப்பகத்தின் காப்பாளர் லோகநாதன் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வில், கற்காலங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் ஆன இரு ஈம பேழைகள் மற்றும் ஒரு ஈம தாழி ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.

பெருங்கற்காலம் எனப்படும் கி.மு. 1000 ஆண்டு முதல், கி.மு.300-ம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த இந்த ஈம பேழைகள், ஈம தாழி சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என, பூண்டி பழங்கால அகழ்வைப்பகத்தின் காப்பாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஈம பேழைகள், ஈம தாழி குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அகழ்வாராய்ச்சி மூலம் முழுமையான விவரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x