வள்ளலார் முப்பெரும் விழா, அன்னதானத்துக்கு அரசு மானியம் ரூ.3.25 கோடி - விழா குழுவிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

வள்ளலார் முப்பெரும் விழா, அன்னதானத்துக்கு அரசு மானியம் ரூ.3.25 கோடி - விழா குழுவிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்துக்கான அரசு மானியமாக ரூ.3.25 கோடிக்கான காசோலையை விழா குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடும் வகையில் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

கடந்த 2022 அக்.5-ம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவின் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘வள்ளலார் - 200’ இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலரை வெளியிட்டார். 52 வார விழாக்களில் முதல்வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

52 வாரங்கள் கொண்டாடப்படும்: முதல்வர் பேசும்போது, ‘‘பல்வேறு நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழாவை 52 வாரங்களுக்கு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உட்பட இந்த விழாவுக்கு ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு தினமும் 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதான செலவுக்காக அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்பு குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு, சுற்றுலா துறை செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளீதரன், வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புகுழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in