

திருப்பூர்: திருப்பூர் அலகுமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 7 மாடுகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த வீரர் முதல் பரிசு பெற்றார்.
திருப்பூர் மாவட்டம் அலகுமலை அடிவாரத்தில் பொங்கல் திருநாளையொட்டி, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சு.வினீத், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முதல் காளையாக அலகுமலை கோயில் காளை களம் இறங்கியது. தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் 3 காளைகள் களம் இறங்கின. இவற்றை மாடுபிடி வீரர்களால் பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து பல்வேறு காளைகள் வாடிவாசலை கடந்து, உற்சாகமாக துள்ளிக்குதித்து திமிறிய திமில்களோடு கம்பீரம் காட்டின. மாடுபிடி வீரர்களும் சளைக்காமல் தொடர்ந்து களம் இறங்கி மாடுகளின் திமிலைப் பிடித்து அடக்கி, அண்டா, வெள்ளிக்காசு, குடம், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை தட்டிச் சென்றனர். காங்கயம், உம்பளச்சேரி உட்பட பிரசித்தி பெற்ற காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றன.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை என பல்வேறு பகுதிகளில் இருந்து 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 577 காளைகள் களமிறக்கப்பட்டன. இருபுறத்திலும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் ஓடு தளத்தை சுற்றியபோதெல்லாம், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். தேனியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா, தான் வளர்த்த 4 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க செய்தார். சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகள் வழங்கினார்.
இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் 7 மாடுகளை அடக்கி, முதல் பரிசான விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வென்றார். அதேபோல, 6 மாடுகளை அடக்கிய குளத்தூரை சேர்ந்த ஜெகதீஷுக்கு 2-ம் பரிசாக இருசக்கர வாகனமும், 4 மாடுகளை அடக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த தாமஸுக்கு அரைபவுன் தங்கமும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரையின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, விலை உயர்ந்த இருசக்கர வாகனமும், 2-ம் பரிசாக கோவையை சேர்ந்த சுரேஷின் காளைக்காக இருசக்கர வாகனமும், 3-ம் பரிசாக திருச்சியை சேர்ந்த அஜித்தின் காளைக்காக அரைபவுன் தங்ககாசும் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் 59 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் திருப்பூர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.