Published : 26 Apr 2023 06:14 AM
Last Updated : 26 Apr 2023 06:14 AM
சென்னை: மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞர் காயமடைந்துள்ளார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது மாஞ்சா நூல் பட்டம் ஒன்று பறந்து வந்து நிக்கி சரண் கழுத்தில் மாட்டியது.
இதனால் அவர் கழுத்து அறுந்தநிலையில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். அப்போது பெண் நண்பர்வந்தனா சுதாரித்துக் கொண்டு நண்பரை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்தபோது அவரது கை விரல்களிலும் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நிக்கி சரண் மற்றும் வந்தனா இருவரும் அங்கிருந்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தடையை மீறி மாஞ்சா நூல்பட்டம் பறக்க விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT