Published : 26 Apr 2023 06:57 AM
Last Updated : 26 Apr 2023 06:57 AM
மாமல்லபுரம்: ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 2.90 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதைமீட்பதற்காக மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் பகுதிக்கு வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும், கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த, கிராமத்தைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்றுகளை பயிரிட்டு, கடற்கரைப் பகுதியை பசுமையாக பராமரித்து வந்தார். இதனைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் இவர் பராமரித்து வந்த பகுதிகளை உள்ளடக்கி 1,054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி ஆளவந்தாரை கவுரவித்தனர்.
இவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சொத்துக்களை தனிநபர்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடந்த, சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பலகோடி ரூபாய்மதிப்புள்ள இடங்களை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
இதன்தொடர்ச்சியாக அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை வரும் ஏப்.30-ம் தேதிக்குள் அகற்றி நிலத்தை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளையின் செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில் அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம், நெம்மேலி, பட்டிப்புலம் கிராமப் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 2.90 ஏக்கர் நிலத்தை மீட்க முடிவு செய்தனர்.
இதையடுத்து பட்டிப்புலம் மீனவ கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற குழுவினர்சென்றபோது, அப்பகுதி மக்கள் நுழைவாயில் முன்பு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இன்று (26-ம்தேதி) ஒரு நாளுக்குள் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரையோ அல்லது உத்தரவிட்ட நீதிமன்றத்தையோ அணுகி முறையிடுமாறும் அதுவரையில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், மாவட்ட நிர்வாகம் மக்களின் கோரிக்கைக்கு அனுமதிக்காவிட்டால் மீண்டும் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT