

சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர், அடையார் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கல்லூரியின் நடனத்துறை உதவிப் பேராசிரியரான ஹரிபத்மனை ஏப்.3-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், ஹரிபத்மன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது. அப்போது ஹரிபத்மனுக்கு ஜாமீன்வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.