Published : 26 Apr 2023 06:24 AM
Last Updated : 26 Apr 2023 06:24 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் சேர,சோழ, பாண்டியனாக இருந்து இம்மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கின்றனர் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார்.
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட புதூர் நாடு மலைப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவுற்ற பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 3,041 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் மற்றும் 3,158 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்று 75 நாட்கள் ஆகிறது.
அவரது சுற்றுப்பயணம் எல்லாம் கிராமத்தை தேடியும், மலைப் பகுதியை நோக்கியும் உள்ளது. இதனால், தான் அவர் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 3,041 பேருக்கு ஜாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு மலைப் பகுதியிலும் இது போன்று நடந்தது இல்லை. திறமையான ஆட்சித்தலைவரை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் பணியமர்த்தியுள்ளார்.
அதேபோல தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேரும் சேர, சோழ, பாண்டியனாக இருந்து இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, திருப் பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி காரியவாதி. அமைதியாக இருந்து, மென்மையாக பேசி தனது தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுச் செல்கிறார். இவர்களை, நான் பாராட்டுகிறேன். மாவட்ட ஆட்சியர்களை தேடி தமிழக முதல்வர் வருகிறார்.
அதனால், மக்களை தேடி இப்போது மாவட்ட ஆட்சியர்கள் செல் கின்றனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்க மாகும்.
முன்பெல்லாம் வருவாய்த் துறை சான்றிதழ் பெற மலை வாழ் மக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது மலைகிராமங்களை தேடி வந்து வருவாய்த் துறையினர் சான்றிதழ் வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுவே, திராவிட மாடல் ஆட்சி யின் சாதனையாகும். சமூக பாது காவலராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்’’ என்றார். நிகழ்ச்சியில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசும்போது, ‘‘புதூர் நாடு மலைப்பகுதியில் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். 32 கிராமங்கள் உள்ளன.
இங்கு, 30 படுக்கைகள் கொண்ட ஒரு மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், புங்கம்பட்டு நாட்டில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், நெல்லிவாசல் நாடு, புலியூர், சேர்க்கானூர் பகுதியில் 3 துணை சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு, தினசரி 200 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதூர்நாடு மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் தோறும் சராசரியாக 30 பிரசவம் நிகழ்கிறது. 2 ஆம்புலன்ஸ்கள் மக்கள் வசதிக் காக தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அகில இந்திய அளவில் மலைவாழ் மக்களுக்கான முதல் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு புதூர்நாட்டில் ரூ.28.84 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. இதில் 6 பிறந்த குழந்தைகளை ஒரே நேரத்தில் வைத்து பராமரித்து சிகிச்சை அளிக்க முடியும்.
இதன் மூலம் இனி திருப்பத்தூர் மற்றும் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு இங்கிருந்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை மலைவாழ் மக்களுக்கு ஏற்படாது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் செல்வராசு, புதூர்நாடு ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் ஜெயகுமார் நன்றி கூறினார்.
அதேபோல, ஏலகிரி மலையில் நடைபெற்ற விழாவில் 759 மலைவாழ் மக்களுக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT