Published : 26 Apr 2023 06:10 AM
Last Updated : 26 Apr 2023 06:10 AM

கோபாலபுரத்து விசுவாசி என்று சொல்லும் தைரியம் எனக்கு உண்டு: துரைமுருகன் பெருமிதம்

வேலூர்: நான் கோபாலபுரத்து விசுவாசி என்று சொல்கிற தைரியம் எனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரையில் அப்படித்தான் இருப்பேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி யில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில், அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘அமைச்சர் துரை முருகன் எங்களுக்கு பேராசிரியர்.

நாங்கள் எல்லாம் மாணவர்கள். அவர் சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம். சட்டத்தை படித்து விட்டு சட்டப் பேரவையின் முன்னவராக இருக்கிறார். அவரைப்போல அவை முன்னவராக யாராலும் இருக்க முடியாது. காட்பாடி மக்களுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார்.மக்கள் அவர் மனம்புண்படும்படி நடந்துக் கொள்ளாதீர்கள் ’’ என்றார்.

பின்னர், அமைச்சர் துரை முருகன் பேசும்போது, ‘‘நேரு பேசும் போது சொன்னார். நான் சீனியர் என்றும், நான் சொல்வதை எல்லாம் கேட்பேன் என்று. அதெல்லாம் கிடையாது. இந்த கூட்டத்தில் நான் முதலில் பேசுகிறேன் என்று சொன்னேன், ஆனால், அவர் அதையே கேட்கவில்லை. முதலில் பேச எழுந்து போய் விட்டார்.

காட்பாடி நகரம் நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது. காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் வருகின்றன. சமாளிக்க முடியவில்லை என டிஎஸ்பி தெரிவித்தார். சட்டப்பேரவையில் துண்டு சீட்டில் எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப் பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்க அறிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: அம்மாவுக்கு ஆயிரம், பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு. பேருந்து விட்டிருக்கோம். உங்களுக்கு பொழுபோகவில்லை என்றால் பேருந்தில் ஏறி ஆற்காடு போய், அங்கிருந்து வேலூர் வரும் பேருந்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுங்கள். இங்கிருந்து குடியாத்தம் கூட போங்கள். யாரும் கேட்க மாட்டார்கள். 23 லட்சம் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கிறோம்.

ரூ.15 ஆயிரம் ஏலம் போடுகிறார்கள்: வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். 15 ஆயிரம் 15 ஆயிரம் என ஏலம் போடுகிறார்கள். ஒரு ஆளை விட்டு நாளை நோட்டமிட சொல்லி இருக்கிறேன். தாசில்தார் அலுவலத்தில் ஏஜென்ட்கள் இருந் தால் அந்த தாசில்தாரை பிடித்து உள்ளே போட்டு விடுவேன்.

கோபாலபுர வீட்டுக்கு நான் சென்றபோது ஸ்டாலின் சிறியவர். நாங்கள் எல்லாம் மிரட்டுவோம், ஓடி போய் விடுவார். பிறகு வளர்ந்து தோளுக்கு வந்த தோழனாகி இன்று தலைக்குமேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருக்கிறார்.

நான் ஏற்றுக் கொண்டிருக் கிறேன். எங்கேயோ இருந்து வந்த என்னை காட்பாடி தொகுதியில் அறிமுகப்படுத்தினர். கடந்த 1962-ல் இருந்து கருணாநிதியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அதைத்தான் நான் சொன் னேன் கோபாலபுரத்து விசுவாசி என்று. சொல்லுகிற தைரியம் எனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரையில் அப்படித் தான் இருப்பேன். பொதுப் பணியில் இருக்கக்கூடிய நாம் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்கவேண்டும். வாக்கு கேட்கும்போது ஒரு மகனாக வந்தவன் இன்று எனது மகனோடு வந்திருக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x