

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
போலீஸார் தாக்கி இருவரும் உயிரிழந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 9 பேரும் கைதான நாளிலிருந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் 132 சாட்சிகள் உள்ளனர். இதுவரை 47 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுஉள்ளனர். மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க 5 ஆண்டுகள் ஆகும். நான் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். அதனால் ஒரு சாட்சியை விசாரிக்க ஒன்றரை மாதங்கள் வரை ஆகிறது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுதாரருக்கு தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.