

மதுரை: மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென்பொருள் நிறுவன கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகிலுள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் அமெரிக்காவை சேர்ந்த டியோ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கிறது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசிடம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான புதிய அலுவலக கட்டிடம் எல்காட் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படுகிறது.
இதன் பூமி பூஜையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
5 ஆயிரம் பேருக்கு வேலை: அப்போது அமைச்சர் கூறும்போது, ‘இங்கு அமையும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இதன்மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை மேம்பாடு அடையும். தமிழகத்தில் தொழில் செய்ய வரும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசுஅனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்கும்' என்று குறிப்பிட்டார்.