

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.
வெள்ளகோவில் பகுதியில் முறைகேடாக மருத்துவமனை மற்றும் மருத்துவம் தொடர்பான கல்லூரியும் செயல்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சு.வினீத்துக்கு புகார் சென்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஓலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, 80 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இவர்களுக்கு பி.இ.எம்.எஸ். மற்றும் எம்.டி.இ.எச். ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.
இந்த படிப்புகளை பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. இதையடுத்து அனுமதியின்றியும், முறைகேடாகவும் பயிற்றுவிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அதன் உரிமையாளர் தரண்யா மற்றும் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, முறைகேடாக செயல்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ‘சீல்' வைத்தனர். மேலும், இதுகுறித்து விளக்கமளிக்க சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக திருப்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "ஓலப்பாளையத்திலுள்ள செல்வநாயகி எலக்ட்ரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் அனுமதியில்லாத படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும், 40 பேர் இங்கு படித்து வெளியே சென்றுள்ளார்கள். அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக கல்லூரிக்கு ‘சீல்' வைத்துள்ளோம்" என்றனர்.