

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி கிலோ ரூ.2 விற்பனையானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள வேப்பனப் பள்ளியில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்குச் செல்கின்றன. மேலும், உள்ளூர் தேவைக்காகக் கிருஷ்ணகிரி காய்கறி சந்தை, உழவர் சந்தைக்கும் விற்பனைக்குச் செல்கின்றது.
தற்போது, இப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
15 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளிக் கூடை ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரை விலை கிடைப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால், தக்காளியை அறுவடை செய்யாமல், தோட்டத்திலேயே கால்நடை களுக்குத் தீவனமாக்கி வருகின்றனர்.
இதனிடையே, வேப்பனப்பள்ளி அருகே பதிமடுகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் தனது தோட்டத்தில் நேற்று அறுவடை செய்த தக்காளி சந்தையில் விற்பனையாகாமல் திரும்பிய நிலையில், நாச்சிக்குப்பம் அருகே மார்க்கண்டேயன் நதியில் தக்காளியைக் கொட்டினார்.
பயிர் காப்பீட்டுத் திட்டம்: இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, “தக்காளி மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். மானிய கடன் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தக்காளி சாகுபடியைச் சேர்க்க வேண்டும்” என்றனர்.