Published : 02 Sep 2017 09:18 AM
Last Updated : 02 Sep 2017 09:18 AM

மீனவர் குப்பத்துக்குள் கோஷ்டி மோதல்: 2 பேர் கொலை, 10 பேர் காயம் - படகுகள், இரு சக்கர வாகனங்களுக்குத் தீவைப்பு; போலீஸ் குவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே இரண்டு மீனவர் குப்பத்துக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படகுகள், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அருகருகே அமைந்துள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலமரக்குப்பம். இந்தப் பகுதிகளில் திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, படப்பிடிப்பு நடத்துபவர்கள் பணம் கொடுப்பார்கள். இந்தப் பணத்தை பிரிப்பது தொடர்பாக இவர்களுக்குள் ஏற்கெனவே பகைமை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடல் சீற்றம், கடல் அரிப்பு போன்ற நேரங்களில் படகுகளைக் கரைகளில் இழுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டிராக்டர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஏற்கெனவே அவர்களுக்குள் பகைமை இருந்த நிலையில், கடப்பாக்கம் குப்பம் மீனவர்களுக்கும், அலமரக்குப்பம் மீனவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஆலமரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடப்பாக்கம் குப்பம் பகுதிக்குள் புகுந்து படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தங்கள் படகுகளில் இருந்த வலைகளை எடுக்க வந்த கடப்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் சேகர்(30), காளி என்பவரது மகன் ராமகிருஷ்ணன்(33) ஆகிய இருவரையும் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கினர். தடுக்க முயன்றவர்களையும் தாக்கினர். இதில் சேகர், ராமகிருஷ்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த சூணாம்பேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகாமையில் உள்ள காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த இருவரின் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையில் சுமார் 200 போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலைக் கண்டித்து கடப்பாக்கம் குப்பம் மக்கள் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் மீனவர் குப்பத்துக்குள் போக முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x