Published : 06 Sep 2017 05:08 PM
Last Updated : 06 Sep 2017 05:08 PM

பிரபல ரவுடி கல்வெட்டு ரவி உட்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பெண் உட்பட 6 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் நேற்று உத்தரவிட்டார்.

அதன்படி 1.ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி (37), இவர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திலும், 2.தனம் (எ) தனலஷ்மி(38) பெண் குற்றவாளியான இவர் மீது மெரினா காவல் நிலையத்திலும், 3.சமுன் (எ) சம்சுதீன்(48) இவர் மீது சிஎம்பிடி காவல் நிலையத்திலும், 4.முரளி(26) 5.ஸ்டீபன்(28) இவர்கள் இருவர் மீதும் அம்பத்தூர் காவல் நிலையத்திலும் 6.கார்த்திக் (எ) பாலா (எ) பாலகிருஷ்ணன்(25) இவர் மீது தரமணி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1.ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி என்பவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 6 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 6 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தனம் (எ) தனலஷ்மி என்பவர் மீது கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் வழிப்பறி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

3. சமுன் (எ) சம்சுதீன் மீது போலீஸ் எனக் கூறி வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு செய்ததாக 3 வழக்குகள் உள்ளன. 4. முரளி மற்றும் ஸ்டீபன் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட அடிதடி வழக்குகள் மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகள் உள்ளது. கார்த்திக் (எ) பாலா (எ) பாலகிருஷ்ணன் மீது 2014ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு உட்பட குற்ற வழக்குகள் உள்ளன.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x