Last Updated : 24 Apr, 2023 12:12 PM

4  

Published : 24 Apr 2023 12:12 PM
Last Updated : 24 Apr 2023 12:12 PM

“12 மணி நேர வேலை... ஒரு டாக்டராக இதைச் சொல்கிறேன்...” - ஆளுநர் தமிழிசை கருத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை | படம்: நா. தங்கரத்தினம்

மதுரை: "தெலங்கானாவில் மக்களுக்கான ஆளுநராகத்தான் நான் செயல்படுகிறேன். மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்தே நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்" என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் 12 மணி நேர வேலை மசோதா குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தெலங்கானா ஆளுநர், "கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராகவும் இதனை நான் கூறுகிறேன். உலகம் முழுவதும், வேலை நேரத்தை அதிகப்படுத்தி, அதேநேரத்தில் ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்திக்கொள்ளலாமா என்பது குறித்து மருத்துவ ரீதியாகவே ஒரு ஆராய்ச்சி நடக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்யும் போதும் ஒட்டுமொத்த வேலை நேரத்தை கூட்டவோ குறைக்கவோ இல்லை. வாரத்தின் மொத்தம் வேலை செய்யும் நேரத்தை எட்டாக பிரித்துக் கொள்ளலாமா? பன்னிரெண்டாகப் பிரித்துக் கொள்ளலாமா? என்பதே விஷயம். 12-ஆக பிரித்துக் கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது

இதில், மருத்துவ ஆய்வு சொல்வது குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது. அதில், 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால் மீண்டும் பணிக்கு வரும்போது வேலை செய்யும வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் உதவி செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

12 மணி நேரம் வேலைசெய்ய யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு விதத்தில் பொதுமக்களுக்குள் விருப்பப்பட்டு எடுப்பவர்களும் இருப்பார்கள். அதனால் இதில் கட்டாயப்படுத்துவது இல்லை என்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை. விருப்பப்படுபவர்கள் அவர் தொழிலுக்கு ஏற்றவாறு பணி நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விருப்பப்பட்டு தான் எடுக்கிறோம் என்று கட்டாயப்படுத்தி விடக் கூடாது என்பதை கண்காணித்துக் கொள்ளலாம். இதனை தொழிலாளர் விருப்பத்திற்கு விட்டு விடலாம் என்பது என்னுடைய கருத்து.

கவர்னருக்கு எதிரான ஒரு போக்கு நிலவுவதாக கேட்கிறீர்கள். அவர்கள் கவர்னரை அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள். நான் தமிழகத்தைப் பற்றி சொல்லவில்லை தமிழகத்தில் ஆளுநர் ரவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன். மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை எய்ம்ஸ்சில் படிக்கிறோமா, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோமா என்பதில்லை. மனிதர்களைப் படிக்கிறோமா, நோயைப் படிக்கிறோமா என்பதே முக்கியம். எந்த மருத்துவமனையும் செங்கலால் கட்டப்படுவது இல்லை. மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது.

எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லாவிதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் எல்லாவற்றிலும் ஒருசில பிரச்சினைகள் இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸில் தான் படிக்க வேண்டும் என்பதில்லை. ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸும் அப்படிதான். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பின்னர் தான் எல்லோருக்கும் தெரிய வரும் எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x