Published : 12 Sep 2017 09:34 AM
Last Updated : 12 Sep 2017 09:34 AM

தரமற்ற இனிப்பு வகையால் பாதிப்பு: வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு

தரம் குறைந்த பாதுஷா இனிப்பை உட்கொண்டு உடல்நலம் பாதித்த வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இனிப்பு தயாரிப்பு கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சூளை பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனு: சவுகார்பேட்டையில் உள்ள ஒரு இனிப்பு தயாரிப்பு கடையில் 250 கிராம் ஸ்பெஷல் பாதுஷாவை கடந்த 2016 செப்டம்பர் 15-ம் தேதி வாங்கினேன். அதில் ஒரு பாதுஷாவை மறுநாள் உட்கொண்டேன். அதைத்தொடர்ந்து எனக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பின்னர், உணவு பாதுகாப்பு துறையிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தேன். அவர்கள் என்னிடமிருந்தும், இனிப்பு கடையில் இருந்தும் மாதிரிகளை பெற்று கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆய்வில், பாதுஷா தரம் குறைவாக இருந்ததும், அதில் டார்ட்ராசைன் ரசாயனம் கலந்திருப்பதும் தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, டார்ட்ராசைன் ரசாயனமானது ஆஸ்துமா, தோல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000-த்தை வழங்க வேண்டும் என இனிப்பு தயாரிப்பு கடைக்கு உத்தரவிட வேண்டும். அதோடு, பாதுஷா விற்பனை செய்ய அந்த கடைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் உயிரொளி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ஆதாரங்கள் மூலம் தரமற்ற பாதுஷா விற்பனை செய்தது உறுதியானது. அந்த பாதுஷாவை உட்கொண்டதால் மனுதாரரின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவாக ரூ.5,000-த்தை இனிப்பு தயாரிப்பு கடை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x