Published : 24 Apr 2023 06:04 AM
Last Updated : 24 Apr 2023 06:04 AM
உதகை/உடுமலை/பொள்ளாச்சி: நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவது அதிகரித்துள்ளது. உதகையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனால், கடந்த சில தினங்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாகஉதகை, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதனால், கூடலூர், பந்தலூர், குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் வெப்பம் ஓரளவு குறைந்துள்ளது. உதகையில் நிலவும் ‘குளுகுளு’ காலநிலையை சுற்றுலாபயணிகள் வெகுவாக அனுபவித்து வருகின்றனர்.
முதுமலை மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு, பல நூறு ஏக்கர் பரப்பிலான வனங்கள் எரிந்து நாசமாகின. தொடர்ந்து மழை பெய்தால் வனங்களில் வறட்சி நீங்கி, வனத்தீ அபாயம் நீங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாமல் வறட்சி மேலோங்கி இருந்ததால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், தற்போது கோடைமழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி உதகையில் 4, நடுவட்டத்தில் 2, கிளன்மார்கன் 23, மசினகுடி 2, குந்தா 7, அவலாஞ்சி 2, எமரால்டு 15, கெத்தை 39, அப்பர் பவானி 3, கேத்தி 5, கோத்தகிரியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவியது. இதனால்,பகலில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடி பரப்புகள் கடும் வெப்பத்தால் காய தொடங்கின.
அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்துள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் பலத்த காற்று, இடியுடன் கன மழை கொட்டியது.இம்மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம், ரெட்டியாபாளையம் பகுதிகளில் தண்ணீரின்றி காய்ந்து காணப்பட்ட கரும்பு பயிர்களுக்கு, உயிர் தண்ணீராக இந்த மழை பெய்துள்ளது. ஆத்துக்கிணத்துப்பட்டி பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன" என்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றுமாலை இரண்டு மணி நேரத்துக்குமேல் பெய்த திடீர் மழையால்சாக்கடை கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பத்ரகாளியம்மன் கோயில் வீதியில் உள்ள பாலத்தில் அடைத்துக்கொண்டதால் மழைநீர் அருகில் உள்ள தன்னாட்சியப்பன் கோயில் வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதில் அப்பகுதியில் உள்ள நாகராஜ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அங்கு வசிப்பவர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மரப்பேட்டை பள்ளத்தை தூர்வாரவும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT