

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகம்,மாநகர போக்குவரத்துக் கழகம்,கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களைநியமிக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட சிஐடியு தொழிற்சங்கத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து 8 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 22 மண்டல அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) கீழ் இயங்கும் சங்கங்களின் நிர்வாகிகள், கடந்த 18-ம்தேதி வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர். இத்துடன் தொழிலாளர்துறைக்கும், காவல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் வரும் 26-ம் தேதிமாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறும். சென்னை,தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம்,தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் இப்பேச்சு வார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தமிழ்நாடுஅரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் போக்குவரத்து நிர்வாகங்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் பொது அமைதிகாத்திடுமாறும் சமரச பேச்சுவார்த்தையின் சுமூக முடிவை எதிர்நோக்குமாறும் தொழிற்சங்கத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.