Published : 24 Apr 2023 06:13 AM
Last Updated : 24 Apr 2023 06:13 AM

ஐரோப்பிய நாடுகளை போல தமிழகத்திலும் புத்தக தின கொண்டாட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஐரோப்பிய நாடுகளைப் போல தமிழகத்திலும் புத்தக தினம் கொண்டாடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக் குழு சார்பில் உலக புத்தகதின விழா-2023 சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பொது நூலக இயக்குநர் இளம்பகவத், இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நான் மேயராக இருந்தபோது 'மேயர் என்பது பதவி அல்ல பொறுப்பு' என்ற புத்தகத்தையும், மராத்தான் குறித்த 'ஓடலாம் வாங்க' என்ற புத்தகத்தையும் எழுதினேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும் தமிழ்நாட்டில் கரோனா கால அனுபவங்களை, ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்பதற்காக தகவல்களைச் சேகரித்து வருகிறேன். இன்னும் 3 மாதங்களில் புத்தகத்தை எழுத இருக்கிறேன்.

சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடைபெறும் சூழ்நிலை மாறி, ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை நடத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுவதைப் போன்ற ஒரு நிலை தமிழகத்துக்கும் வரும் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன். மதுரையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அதை மிக விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மிகச்சிறந்த நூல்களின் எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும்உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x