

மதுரை: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடு ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருப்புமுனையாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதர வாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கே.பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சசிகலா, டிடிவி.தினகரனுக்கு எதிராக இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் செயல் பட்டனர். காலப்போக்கில் தேர்த லில் ‘சீட்’ பங்கீடு, நிர்வாகிகள் நியமனத்தில் கட்சிக்குள் மோதல் வெடித்தது. பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள் கே.பழனி சாமியின் ஆதரவாளர்களாக இருந் ததால், அவர்கள் கட்சியில் தங் கள் ஆதரவாளர்களை நியமனம் செய்ததாக ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வில் கே.பழனிசாமி ஆதரவாளர்கள் கையே ஓங்கியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்க, மோதல் ஏற்பட்டது. முதல் முறையாக, மதுரை மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் தேர்வின்போது மோதல் வெடித்தது.
மதுரை எம்பி தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனை பரிந்துரை செய்தார். கே.பழனிசாமி தரப்பில் செல்லூர் கே.ராஜு, ஆர்பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் சேர்ந்து ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனை வேட்பாளராக பரிந்துரை செய்தனர்.
கே.பழனிசாமி, விடாப்பிடியாக ராஜ்சத்யனை மதுரை வேட்பாளராக அறிவித்தார். அதனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக வேலை செய்ததால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றிபெற்றார்.
அதேநேரத்தில் ஆர்பி.உதயகுமார் தேர்தல் வேலை செய்த தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார்.
ஓ.பன்னீர்செல்வம், அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை. மேலும் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே முடங்கினார் என்றும், அவரது ஆதரவாளர்களை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக தூண்டி விட்டதாகவும் கே.பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இரு தரப்பினரின் மோதலால் ஆட்சி பறிபோனதும் இரு பிரிவாக செயல்பட்டனர். இரு தரப்பினரும் பிரச்சினை முற்றி தற்போது நீதிமன்றமும் , தேர்தல் ஆணையமுமே கே. பழனிசாமியை அங்கீகரித்தது. அதை ஏற்க மறுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம், தனது செல்வாக்கை காட்ட திருச்சியில் இன்று மாலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். திருச்சி தமிழகத்தின் மையமாக இருப்பதால் முக்கிய நகரங்களில் இருந்து 4 மணி நேரத்தில் திருச்சியை கட்சியினர் வந்தடைய முடியும் என்பதாலேயே ஓ.பன்னீர்செல்வம் திருச்சியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறுகிறார் கள்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: கடந்த காலத்தில் தொண்டர் களின் கருத்தைக் கேட் காமலேயே எம்ஜிஆரை திமுகவில் இருந்து கருணாநிதி நீக்கினார்.அதனால் அவர் கருணா நிதிக்கு எதிராக அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆரை நம்பி மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பெரிய அளவில் வரவில்லை.
தொண்டர்களை நம்பி அதிமுகவை தொடங்கி அரசியலில் வெற்றிபெற்றார். அப்போதே அவர் தொண்டர்களே கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும்படி அதிமுக சட்ட விதிகளை உருவாக்கினார். ஆனால், கே.பழனிசாமி தனக்குச் சாதகமாக அதிமுக சட்ட விதிகளை மாற்றி உள்ளார். கட்சியின் அடித்தளமான தொண்டர்களை தேடித்தான் நாங்கள் புறப்பட்டுள்ளோம். அதற்கான தொடக்கம்தான் இன்று நடக்கும் திருச்சி மாநாடு.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போல் தொண்டர்கள் தலை வர்களாக ஆக முடியவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் காலத்தில் அனைத்து மாவட்டங் களிலும் தொண்டர்கள் மாவட்டச் செயலாளர்களாக, தலைவர்களாக மாறக்கூடிய காலம் வந்துள்ளது. இதை அதிமுகவின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாகவே பார்க் கிறோம். மாநாட்டில் பங்கேற்க மாவட்டத்துக்கு 5 ஆயிரம் பேர் வீதம் திருச்சிக்கு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.