பட்டுக்கோட்டை | குப்பை சேகரித்த பெண்களை காலணியால் அடித்த திமுக மகளிரணி நிர்வாகியின் கணவர்: போலீஸார் விசாரணை

பட்டுக்கோட்டையில் குப்பை சேகரித்த பெண்களை காலணியால் தாக்கும் சுவாமிநாதன்
பட்டுக்கோட்டையில் குப்பை சேகரித்த பெண்களை காலணியால் தாக்கும் சுவாமிநாதன்
Updated on
1 min read

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே குப்பை சேகரித்த பெண்களை காலணியால் அடித்த, திமுக மகளிரணி நிர்வாகியின் கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள குறிச்சி, ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன்(46). இவரது மனைவி தீபா லெட்சுமி. இவர் பேராவூரணி ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் ஞாயிறன்று காலை, துறவிக்காடு எம்ஜிஆர் நகர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த கணேசன் மனைவி போதும்பெண்ணு(22) உள்ளிட்ட பெண்கள், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து வந்துள்ளனர்.

அப்போது, சுவாமிநாதனுக்கு செந்தமான இடத்தில், அந்தப் பெண்கள் குப்பைகளை சேகரித்துள்ளனர். இதையடுத்து சுவாமிநாதன், அந்தப் பெண்கள், பொருட்களை எல்லாம் திருடி செல்வதாகக்கூறி, தகாத வார்த்தையில் திட்டியுளள்ளார். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை கீழே கொட்டச் சொல்லி, போதும் பொண்ணு என்ற பெண்ணை காலணியால் அடித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பெண்களை காலணியால் அடித்த சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார், சுவாமிநாதனை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவை பகிரும் பலரும் இச்சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in