Published : 23 Apr 2023 01:44 PM
Last Updated : 23 Apr 2023 01:44 PM

ஆடியோவில் இருப்பது நிதி அமைச்சரின் குரல்தான்; மத்திய அரசு விசாரணைக்கு வலியுறுத்துவோம்: இபிஎஸ் உறுதி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

மதுரை: "30,000 கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவோம். ஆளுநரிடம் இதை சமர்ப்பிப்போம்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து கேட்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பேசும் ஆடியோ பதிவை செய்தியாளர்களிடம் ஐபேட் வழியே போட்டுக்காட்டினார். அமைச்சரே பேசிவிட்டு, புனையப்பட்டது என்று அவரே எப்படிச் சொல்ல முடியும். எனவே இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ரூ.30,000 கோடி என்பது சாதாரண விஷயமல்ல. 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது என்று நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். எல்லா வலைதளங்களிலுமே இது காட்டுத்தீப்போல பரவி வருகிறது. ஊடகங்கள்தான் வெளியிடவில்லை. எங்களுக்கு பெரிய சந்தேகமே தற்போது அவர் பேசியதுதான். சமூகவலைதளங்களில் இதுபோல நிறைய வருகிறது. அப்போதெல்லாம் அவற்றை நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நிதி அமைச்சர் மறுப்பு அறிக்கைவிட்ட பிறகுதான், இதில் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. இது அவருடைய குரல்தான்.

ரூ.30,000 கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவோம். ஆளுநரிடம் இதை சமர்ப்பிப்போம். நிதி அமைச்சர் பேசியிருக்கிறார். அது போலியானதா, சரியானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உண்மையென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேதோ விசயங்களுக்காக அறிக்கை வெளியிடும் முதல்வர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிடவேண்டியதுதானே. இது போலி என்று அறிக்கை வெளியிடவேண்டியதுதானே.

அதிமுக மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாதபோது, எத்தனை குற்றச்சாட்டுகளை எங்கள் மீது கூறி வருகிறார். ஆதாரபூர்வமாக எதுவுமே கிடையாது. இருந்தாலும், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படியெல்லாம் வழக்குகள் புனையப்படுகிறது. திட்டமிட்டு திமுக அரசு அதிமுகவை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் 2 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. கொள்ளையடிப்பதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது.30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர் என்றால், அதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x