Published : 23 Apr 2023 06:27 AM
Last Updated : 23 Apr 2023 06:27 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட பி.விஜயகுமாரி சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவனும், அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் இரு கட்சியினரும் பல்வேறு விதிமீறல்களி்ல் ஈடுபட்டனர். அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு பெரிய கட்சிகளி்ன் வேட்பாளர்களுக்காக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தினமும் ரூ.550 வீதம் பணம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த செலவு கணக்கு விவரங்களை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்கள் ஆன பிறகும் அவர்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதும் தேர்தல் விதிமீறலே. தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நாள்வரை வாக்காளர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டன.

வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடா குறி்த்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தி யாளர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்து ஈரோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது.

இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக பணநாயகத்துடன் நடைபெற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x