ஓராண்டில் ரூ.30,000 கோடி குவித்ததாக ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பாஜக குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி குவித்துள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வீடியோ பதிவாக வெளியிட்டார். இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையது ஜாபர் இஸ்லாம், டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக நிதி அமைச்சர், செய்தியாளர் ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த ஆடியோ அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர். இதை நான் கூறவில்லை. தமிழக நிதித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 நிறுவனங்களை சபரீசன் தொடங்கியுள்ளார். முறைகேடாக சுருட்டிய பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஓராண்டில் இவ்வளவு பெரிய தொகையை குவித்தது எப்படி என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது, சாமானிய மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம். மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டிய பணம். இந்த பணத்தை தமிழக முதல்வர், அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சட்டத்துக்கு விரோதமாக கொள்ளையடித்து உள்ளனர்.

ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மறுபுறம் திமுக அதிதீவிரமாக ஊழலில் ஈடுபட்டு வருகிறது. காந்தி (சோனியா காந்தி) குடும்பம் மற்றும் திமுக ஊழலில் திளைத்துவருகின்றன. மக்களின் பணத்தை அவர்கள் சூறையாடி வருகின்றனர். இவ்வாறு சையது ஜாபர் இஸ்லாம் தெரிவித்தார். -ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in