Published : 23 Apr 2023 08:50 AM
Last Updated : 23 Apr 2023 08:50 AM
சென்னை: 12 மணிநேர பணிச் சட்டத்துக்கு எதிர்ப்பு தொடரும் நிலையில், அச்சட்டத்தை திரும்பப் பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தும் வகையில், தொழிற்சாலைகள் திருத்த சட்டம்,சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர்ஸ்டாலின், இந்த சட்டத்தை எதிர்த்தார். பாஜக ஆளும் மாநிலங்களைப் போல மத்திய அரசுக்குத் தலையாட்டாமல், தமிழகத்தில் இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், தற்போது தமிழக தொழிலாளர்களைப் பாதிக்கும் வகையில், 12 மணி நேர வேலைதிருத்த மசோதாவை தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றியதை அதிமுக சார்பில் கண்டிக்கிறேன். தொழிலாளர் விரோத மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தொழிலாளர்களின் நலனைக் காக்கஅதிமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மத்திய அரசின் பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியாக சட்டப்பேரவையில் பணிநேர சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கெனவே பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்றமாநிலங்களில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாகஉயர்த்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேநிலை தமிழகத்திலும் உருவாவதை திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சட்டத் திருத்த முன்வரைவை அரசு திரும்பப் பெற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி:தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பறித்து, அவர்களை கொத்தடிமைகளாக்கும் இந்த சட்டத் திருத்தம் தவறானது.இதற்கான விளக்கங்களும், விதிகளும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கக் கூடாது. இதை உணர்ந்து இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: உலகமே கொண்டாடும் மே தினத்துக்கான அடிப்படையே தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைநேரம் தான். அத்தகைய சிறப்புக்குரிய, தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது.இது முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு மேலும் வலுசேர்க்கும். இதனால் தமிழக அரசின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: தமிழக அரசு இயற்றிய இம்மசோதாதொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல.
சமக தலைவர் சரத்குமார்: இல்லத்தரசிகளின் வாழ்வை இந்தச்சட்டம் வேதனைக்கு உள்ளாக்கிவிடும். தொழிலாளர் நலனுக்கு விரோதமான சட்டத்திருத்தத்தை உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT