

வால்பாறை: வால்பாறையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நோயாளி மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள லோயர் பாரளை பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை அவரது மனைவி சாந்தி(38) மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
ஆம்புலன்ஸை தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் காளிதாஸ்(32) என்பவர் ஓட்டி வந்தார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு பின்கதவை திறந்த நிலையில், ஆம்புலன்ஸ் பின்னோக்கி நகர தொடங்கியது. காளிதாஸ் கைகளால் ஆம்புலன்ஸ் நகராதவாறு தடுத்து நிறுத்த முயன்றார். பின்னோக்கி வந்த ஆம்புலன்ஸ் காளிதாஸ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது பின்நோக்கி வந்த ஆம்புலன்சும் பள்ளத்தில் விழுந்தது. இதில் சக்கரத்தில் சிக்கி சிவக்குமார் உயிரிழந்தார். ஆம்புலன்ஸின் உள்ளே அமர்ந்திருந்த சிவகுமாரின் மனைவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.