தொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம்: ஏஐடியுசி தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் தகவல்

அமர்ஜித் கவுர்
அமர்ஜித் கவுர்
Updated on
1 min read

கோவை: தொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம் என ஏ.ஐ.டி.யு.சி தேசிய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் தெரிவித்தார்.

கோவையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் 1920-ல் தொடங்கப்பட்டது. இத்தொழிற்சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிற்சங்க சட்டம், இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், பி.எப். சட்டம் என பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 8 மணி நேர வேலையும், ஏ.ஐ.டி.யு.சி-யின் போராட்டத்தால் கொண்டு வரப்பட்டதே.

தற்போது தமிழ்நாடு அரசு 8 மணி நேரம் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இன்றுள்ள தொழிலாளர் நல சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் 150 ஆண்டு கால தொடர் போராட்டத்தின் விளைவாக பிறந்தவை. அவற்றை திருத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யும்போது அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதில் அவ்வாறு செய்யப்பட வில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி-யும் தொழிலாளர் உரிமைகளுக்காக, தேசிய வளர்ச்சிக்காக நிற்கிறது.

காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5- ம் தேதி முதல் தமிழகத்தில் பாதயாத்திரைகள், இரண்டு சக்கர வாகன பயணங்கள் நடத்த திட்ட மிட்டுள்ளோம். இது நாடு தழுவிய அளவிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், ஏ.ஐ.டி.யு.சி மாநில தலைவர் எஸ்.எஸ். காசி விசுவநாதன், மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in