Published : 23 Apr 2023 12:15 PM
Last Updated : 23 Apr 2023 12:15 PM
கோவை: கோவை - அவிநாசி சாலையில், உயர் மட்ட பாலப் பணி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஜே.எம். பேக்கரி சிக்னல், ஆடீஸ் வீதி, எல்.ஐ.சி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அவிநாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்படுகிறது.
அதற்கு பதில், ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலது புறமாக திரும்பாமல், நேராகச் சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம். ஹோசூர் சாலையிலிருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவிநாசி சாலைக்கு வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில், ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம் சாலையிலிருந்து காந்திபுரம், அவிநாசி சாலை செல்லும் வாகனங்கள், ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.
நஞ்சப்பா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து, அவிநாசி சாலை, பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியிலிருந்து அவிநாசி சாலை செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக மட்டுமே செல்ல முடியும். ஜே.எம்.பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக, அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று, யுடர்ன் செய்து அவிநாசி சாலையை அடைந்து, ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம், அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவிநாசி சாலை, வஉசி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.
காந்திபுரத்திலிருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவிநாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் காந்திபுரத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் எல்.ஐ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அவிநாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஹோசூர் சாலை வழியாக செல்லலாம்.
அண்ணா சிலையிலிருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில், அண்ணா சிலையிலிருந்து வலதுபுறமாக திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலையை அடைந்து, காந்திபுரத்துக்கு செல்லலாம். அண்ணா சிலையிலிருந்து அவிநாசி சாலையில் நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
காந்திபுரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவிநாசி சாலையில் வலதுபுறமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில், பாலசுந்தரம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஹோசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.
செஞ்சிலுவை சங்க சாலையிலிருந்து ஹோசூர் சாலையில், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் வரை மட்டுமே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப் படும். ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலிருந்து வலதுபுறமாக திரும்பி கேஜி திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம். இவ்வாறு மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT