Last Updated : 27 Sep, 2017 10:10 AM

 

Published : 27 Sep 2017 10:10 AM
Last Updated : 27 Sep 2017 10:10 AM

‘வார்தா’ புயலால் மரம் விழுந்த இடங்களில் வனத்துறையால் பராமரிக்கப்படும் 17 ஆயிரம் மரக்கன்றுகள்

கடந்த ஆண்டு ‘வார்தா’ புயல் தாக்கியதில் மரங்கள் சாய்ந்த இடங்களில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு ‘வார்தா’ புயல் தாக்கியதில் சென்னையில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில், 18 ஆயிரம் மரங்கள் சாய்ந்துவிட்டது தெரியவந்தது. அவ்வாறு மரங்கள் விழுந்த இடங்களில் மரக்கன்றுகளை நட மாவட்ட வனத்துறை திட்டமிட்டது. அரசும் ரூ.4 கோடி அனுமதித்தது.

இதையடுத்து அண்ணாநகர், வேளச்சேரி, படப்பை, நன்மங்கலம் சந்தோஷபுரம் ஆகிய நான்கு இடங்களில் உருவாக்கப்பட்ட நாற்றங்கால்களில் 28 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன. இதில், 18 ஆயிரத்தை சென்னையிலும், 10 ஆயிரத்தை வண்டலூர் காப்புக் காட்டிலும் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை மாவட்ட வன அலுவலர் கே. அசோகன் கூறியதாவது:

வண்டலூர் காப்புக்காட்டில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டு இதுவரை 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு இதுவரை 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

அண்ணாநகர், ஐசிஎப், முகப்பேர், ஐயப்பன் தாங்கல், போரூர், திருவல்லிக்கேணி, கிண்டி, மீனம்பாக்கம், எழும்பூர் உட்பட 45 இடங்களில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வேம்பு, புங்கன், நாவல், இலுப்பை, பூவரசு, மகிழம், பாதாம், அத்தி, காட்டு வாகை, புன்னை, கடம்பம், ஏழு இலை பாளை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒரு செடியை நாற்றங்காலில் வளர்த்து, மரக்கன்றானதும் நடவு செய்து, கூண்டு கட்டி பராமரிப்பதற்கு ரூ.1,500 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x