

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையை கடந்த 20-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதத்துக்கு முதல்வர் நேற்று முன்தினம் பதிலளித்து பேசினார்.
அப்போது காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் வீடியோ வெளியிட்டதாக நேற்று முன்தினம் புகார் எழுந்தது. குறிப்பாக, போலீஸ்காரர்களே இதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, தேனாம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் பால முருகன், தனது சமூக வலைதளத்தில் மீம், வீடியோ வெளியிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதேபோல, போரூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வந்த கோபி கண்ணன், தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்தும் விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து கோபி கண்ணனை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.