Published : 23 Apr 2023 04:15 AM
Last Updated : 23 Apr 2023 04:15 AM
சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1990-ல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியின் போது, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில்,13,500 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் அவர்களை பணி நீக்கம் செய்வதும், மீண்டும் திமுக ஆட்சியில் நியமனம் செய்வதும் தொடர் கதையானது. கடந்த 33 ஆண்டுகளாக 3 முறை நியமனம், 3 முறை நீக்கம், 126 பேர் மரணம், 96 பேர் தற்கொலை என துயரம் தோய்ந்த வாழ்க்கையில் மக்கள் நலப் பணியாளர்கள் உள்ளனர்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு: 2014-ல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதது வருந்தத்தக்கது.
காலமுறை ஊதியம்: மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கையான, காலமுறை ஊதியத்தில் நிரந்தரப் பணி நியமனம் செய்து, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் அருகே, கடந்த 3 நாட்களாக மக்கள் நலப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே, 13,500 மக்கள் நலப் பணியாளர்களை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காலமுறை ஊதியத்தில் பணியில் அமர்த்தி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT