Published : 23 Apr 2023 04:23 AM
Last Updated : 23 Apr 2023 04:23 AM

ஓபிஎஸ் அணி சார்பில் நாளை திருச்சியில் முப்பெரும் விழா: தொண்டர்களுக்கு அழைப்பு

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்

சென்னை: திருச்சியில் நாளை நடைபெறஉள்ள மும்பெரும் விழாவுக்குதிரண்டு வருமாறு தொண்டர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவில் எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதியான, அடிமட்டத் தொண்டர்கள்தான் கழகத் தலைமைப் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை, ஜெயலலிதா மாற்றவில்லை. ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற உயரிய லட்சியத்துடன் வாழ்ந்ததால்தான், வரலாற்றின் பக்கங்களில் ஓர் உறுதியான இடத்தைப் பிடித்து, மக்கள் மனங்களில் இன்றளவிலும் நிறைந்து இருக்கிறார்.

இத்தகைய பெருமைக்குரிய, ஈடு இணையற்ற தலைவர்கள் கட்டிக் காத்த அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு, சுக்குநூறாக சிதறுண்டு, ஒரு சிலரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பது மாற்றப்பட்டு இருப்பதும், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது என்பதும், கட்சியை உருவாக்கிய எம்ஜிஆருக்கும், கட்சியைக் கட்டிக்காத்த ஜெயலலிதாவுக்கும் இழைக்கும் துரோகம்.

இந்தத் துரோகத்தை முறியடிக்க சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு வந்தாலும், இதற்கான நிரந்தரத் தீர்வு தமிழக மக்களிடத்திலும், தொண்டர்களிடத்திலும்தான் இருக்கிறது. அரசியலில் எத்தனையோ பரமபத விளையாட்டுகள், ஆடுபுலி ஆட்டங்களைக் கடந்துதான் ஆகவேண்டும். இவற்றை நாம் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு நமது உழைப்பு மிகவும் அவசியம்.

நம்முடைய உழைப்பின் மூலமாக, துரோகத்தை துரத்தியடிக்கும் வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டும் வண்ணம், அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா என முப்பெரும் விழா திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில் 24-ம்தேதி மாலை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு திரண்டு வருமாறு தொண்டர்களை அழைக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x