

மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.2 ஆயிரம் மானியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும் என, மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் சுமார் 60 லட்சம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை இழக்கின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதிவரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில், மேற்கண்ட மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 டன்கள் வரை மீன்கள் பிடிக்கப்படும்.
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. இது மீனவர்களின் குடும்பத் தேவைக்கு போதுமானதாக இல்லை. இத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.