Published : 21 Sep 2017 12:42 PM
Last Updated : 21 Sep 2017 12:42 PM

ராமேசுவரம் அருகே பாம்பனில் பிடிபட்ட சேவல் கோழி மீன்: கொடிய விஷத் தன்மையுடையது

ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்கள் வலையில் விஷ சேவல் கோழி மீன் சிக்கியது.

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை 75–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்களுக்கு பல்வேறு வகை மீன்களுடன் ஒரு விஷ சேவல் கோழி மீனும் சிக்கியது.

இந்த மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது:

இந்த மீனை ஆங்கிலத்தில் Pterois fish என்பர். இந்திய பெருங்கடலை பிறப்பிடமாகக் கொண்டது இந்த மீன் உடலில் உள்ள அகன்ற இழைகளின் நிறங்கள் சேவல் கோழி போல இருப்பதாலும், இதன் முட்களில் கொடிய விஷம் இருப்பதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இதில் 12 இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சம் ஒரு அடி நீளம் வளரும். இதில் சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வர்ணங்களில் உணர் இழைகள் அமைந்திருக்கும். சேவல் கோழி மீன் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அகன்ற இழைகளையும், தனது நிறங்களையும் காட்டி தனது இணையையும், இரையையும் கவரும். சேவல் கோழி மீன் இதர மீன்களிடம் எதிர்ப்பைக் காட்டி, தன் நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்ளும்.

18 விஷ முட்கள்

பார் மீன்களில் ஏறத்தாழ 50 வகையான மீன்களை இவை உட்கொள்வதுடன் சிறிய சேவல் கோழி மீனையும் இரையாக்கிக் கொள்ளும். இதன் வயிறு பெரியது என்பதால், சேவல் கோழி மீன் வயிற்றில் ஒரே வேளையில் 30 வகையான இரைகளும் ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சேவல் கோழி மீனின் உடம்பில் 18 விஷ முட்கள் இருக்கும். இதில் 13 முட்கள் மட்டும் முதுகுத் தூவியில் காணப்படும். இதன் நஞ்சு சுறா, அஞ்சாளை, களவாய் மீன்களை பாதிக்காததால் சேவல் கோழி மீன்கள் அவற்றுக்கு இரையாகி விடும். ஆனால், சேவல் கோழி மீனின் முட்கள் மனிதனை குத்தினால் குத்திய இடத்தில் கடும் வலி ஏற்படும். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள ஆரம்பித்துவிடும். உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மரணம் ஏற்படலாம்.

கடல் பார்களில் வசிக்கக்கூடிய சேவல் கோழி மீன்கள் வலையில் அரிதாகவே சிக்கக்கூடியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x