உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்: பொதுச் செயலாளர் ஆன பின்னர் முதன்முறை

எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா | கோப்புப் படம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 26ம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் தேர்வு, தேர்தலுக்குப் பின்னர் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு ஆகியவற்றின்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என முடிவு செய்த பழனிசாமி, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

ஆனால், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்தார். இதில், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலையும் நிறுத்தக் கோரி பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடினார். அதிலும் பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், மார்ச் 28-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனினும், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தின்றி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லாது என்று பன்னீர்செல்வம் கூறிவந்தார். இதற்கிடையில், பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருப்பதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதற்கான உத்தரவை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரும் 26ம் தேதி டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in