Published : 22 Apr 2023 05:05 AM
Last Updated : 22 Apr 2023 05:05 AM
சென்னை: திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டதில் மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.500 கோடி இழப்பீடும் தர முடியாது என, ஆர்.எஸ். பாரதிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கனிமொழி உட்பட 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வெளியிட்டார்.
500 கோடி இழப்பீடு நோட்டீஸ்: அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலி யானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார்.
அதேபோல், உதயநிதி ஸ்டாலின் சார்பில், உதயநிதி மீதான குற்றச்சாட்டுக்கு, அண்ணா மலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி பெற்றுக் கொண்டதாக, ஆர்.எஸ்.பாரதி தன் மீது வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும், இழப்பீடாக 500 கோடியே ஒரு ரூபாய் கேட்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய நோட்டீஸூக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆதாரங்கள் உள்ளன: சட்டத்துக்கு புறம்பாகவோ, அவதூறாகவோ நான் எதையும் கூறவில்லை. திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது வெளியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதில் வெளியிட்ட உண்மைகள், புள்ளிவிவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் முயற்சியாகவும், எனது குரலை ஒடுக்குவதற்காகவுமே திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினர் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் அரசியல்வாதி களால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்து வதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை. பொதுநலனுக்காக மட்டுமே திமுகவினரின் முறைகேடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, திமுக கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT