Published : 22 Apr 2023 04:05 AM
Last Updated : 22 Apr 2023 04:05 AM
சென்னை: கால்நடை, மீன்வளப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா மற்றும் வருவாய், நகராட்சி நிர்வாகம், வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் 15 சட்ட மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவைக் கூட்டத்தின்இறுதிநாளான நேற்று, உள்துறைமானியக் கோரிக்கை மீதான முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து, துறைகள் தோறும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்த, உடற்பயிற்சி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான சென்னை மாநகர காவல் சட்டத்திருத்த மசோதா, ஆய்வுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
குரல் வாக்கெடுப்பு மூலம்...: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் அறிமுகம் செய்யப்பட்ட, தமிழ்நாடு நிதி ஒதுக்கம், தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பெறுப்புடைமை திருத்தம், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர் கே.என்.நேருவால் அறிமுகம் செய்யப்பட்ட, நகர்ப்புற உள்ளாட்சிகளால் சொத்துகள் மீது கல்வி வரி வசூலிக்க அனுமதி அளிப்பது தொடர்பான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல, வருவாய் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்த, மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலான, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகம் செய்த, பழையசட்டங்களை நீக்கம் செய்தல் உள்ளிட்ட இரண்டு சட்ட மசோதாக்கள், வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிமுகம் செய்த, சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான 2 சட்டத்திருத்த மசோதாக்கள், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்த, நில சேர்மப் பகுதி தொடர்பான நகர ஊரமைப்புத் துறை சட்டத்திருத்த மசோதா ஆகியவையும் நேற்று நிறைவேற்றப்பட்டன.
துணைவேந்தர்கள் நியமனம்: தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்த கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதக்களும் நேற்று நிறைவேற்றப்பட்டன.
இதுதவிர, கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு தேவையான ஒய்வறை, கழிப்பறை, உணவறை வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்நாடு கடைகள்மற்றும் நிறுவனத்தின் பதிவுச்சான்று வழங்குதல் ஆகியவற்றுக்காக அமைச்சர் சி.வி.கணேசன் அறிமுகம் செய்த 2 சட்டத்திருத்த மசோதாக்கள் என மொத்தம் 15 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT