காஞ்சிபுரம் கடலோரப் பகுதியில் நடைபெற்ற ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை: பெயரளவுக்கு நடந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழகக் கடலோர மாவட்டங்களில், தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி ஆபரேஷன் சாகர் கவாச் (கடல் கவசம்) என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை காஞ்சி மாவட்டத்திலும் நடைபெற்றது. வழக்கமாக, இந்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் அதிகாலை முதலே கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாகன சோதனைகளை மேற்கொள்வார்கள். இதனால், கிழக்கு கடற்கரையோர கிராமங்கள் பரபரப்புடன் காணப்படும்.
ஆனால், மயிலாடுதுறையில் நடைபெற்றுவரும் துலாக்கட்ட காவிரி மகா புஷ்கரணி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி, இந்தச் சாலை வழியாக நேற்று காலை சென்றார். இதனால் இந்த ஒத்திகையில் ஈடுபட வேண்டிய போலீஸார் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஒத்திகை நிகழ்ச்சி பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றதாகக் கல்பாக்கம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, கடலோர மக்கள் கூறியதாவது: முறையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய போலீஸார், ஒத்திகையை முழுக் கவனத்துடன் மேற்கொள்ளவில்லை. முதல்வரின் பாதுகாப்பு காரணமாக ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு பெயரளவுக்கு மட்டும் வாகன சோதனை நடைபெற்றது வருத்தமளிக்கிறது’’ என்றனர்.
எனினும், ஒத்திகையின்போது தீவிரவாதிபோல் வேடமிட்டு கடல் மார்க்கமாக ஊடுருவ முயன்ற 4 பேரை மாமல்லபுரத்திலும் மற்றும் 2 பேரை சதுரங்கப்பட்டின கடற்கரையில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
