

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை காலம் தொடங்கியுள்ளதால், மாவட்டம் முழுவதும் குளிர்பானக் கடைகளில் மக்களின் நுகர்வு அதிகரித்து உள்ளது. எனவே சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்பவர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவுப் பொருட்களாக இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக் கூடாது.
பணியாளர்கள் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை, உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி, பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான முறையில் பழச்சாறுகளை வழங்க வேண்டும். எனவே, பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.