Published : 22 Apr 2023 05:23 AM
Last Updated : 22 Apr 2023 05:23 AM
சென்னை: சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொழிற்சாலைகளில் எளிதாக பின்பற்றும் வேலைநேரத்தை வழங்கும் நோக்கில், கடந்த 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மாநிலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பேரவைக் கூட்ட நிறைவு நாளான நேற்று, இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போதும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விவரம்:
* வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தொழிலாளர்களுக்கு விரோதமாக, 8 மணி நேர வேலை என்பதை நீர்த்துப்போகச்செய்யும் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவரக்கூடாது.
* செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்): இதை கொண்டுவந்தால் மத்திய அரசின் சட்டத்தை ஏற்பதாக அர்த்தமாகிவிடும். 8 மணி நேர வேலைக்கு பெரிய ஆபத்து உள்ளது. இது தொழிலதிபர்களுக்கு சாதகமானது.
* நயினார் நாகேந்திரன் (பாஜக): தொழிலாளர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் இதை மறுஆய்வு செய்ய வேண்டும்.
* சிந்தனைச் செல்வன் (விசிக): சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தேர்வுக்குழுவுக்கு அனுப்பி முறைப்படுத்தி சரிசெய்ய வேண்டும். 8 மணி நேர வேலை என்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
* வெங்கடேஸ்வரன் (பாமக): சட்டத் திருத்தத்தை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
* டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை பறிப்பு, ஊதிய குறைப்பு, நிரந்தர வேலை குறைப்பு ஆகியவற்றுக்கு இது வித்திடுகிறது.
*சதன் திருமலைக்குமார் (மதிமுக): மத்திய அரசு சத்தமின்றி இந்த சட்டத்தை திணித்துவிட்டனர். நாம் அமல்படுத்த கூடாது.
* ஜவாஹிருல்லா (மமக): வேலை நேரம், வார விடுமுறை, கூடுதல் நேர சம்பளம் உள்ளிட்டவற்றை பறிக்கும் வகையிலான இந்த திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசே தொழிலாளர் விதிகளை அமல்படுத்தாத நிலையில், தமிழக அரசு இதை கொண்டுவருவது சரியல்ல.
* ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): இந்த சட்டத் திருத்தம் மூலம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்க முடியாது. தேவைப்படு பவர்கள் இதை பயன்படுத்தி சட்டப்படி செயல்பட தொழிற்சாலைகளுக்குதான் பயன்படும். தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இந்த சட்டத்திருத்தம் இருக்க வேண்டும்.
* தி.வேல்முருகன் (தவாக): கடந்த 2020ல் தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக, தொழிலாளர்கள் உரிமைகளை நசுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, சாதகபாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.
* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இந்த சட்ட மசோதா மூலம், தொழிற்சாலைகளை பாதுகாப்பதுடன் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டியிருப்பதால் இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
* அமைச்சர் சி.வி.கணேசன்: தற்போது நடைமுறையில் உள்ள 1948-ம் ஆண்டு தொழிலாளர் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வாராந்திர மற்றும் தினசரி வேலை நேரம், ஓய்வு, இடைவேளை, மிகைநேரம், மிகைநேர சம்பளம், வாராந்திர விடுமுறை உள்ளிட்ட எந்த மாற்றமும் இன்றி தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும். சிறப்பு நேர்வுகளில் திருத்தியமைக்கப்படும் பிரிவின் கீழ், விதிவிலக்கு கோரும் தொழிற்சாலைகளுக்கு அரசின் பரிசீலனைக்கு பிறகு, சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில், தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும், எந்த நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர்களுக்கு இடையூறு இல்லாமல் தொழிலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும்தான் இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது. தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலித்து ஆய்வு செய்த பிறகுதான் நிறைவேற்றப்படும். இந்த அரசு ஒருபோதும் தொழிலாளர்களுக்கு எதிராக இருக்காது.
(மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தவாக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வாய்ப்பு கேட்டதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.)
* பேரவைத் தலைவர் அப்பாவு: ‘தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைவரும் அமர வேண்டும்.
(நாகை மாலி வாய்ப்பு கேட்டு எழுந்து பேசியதால், அமளி ஏற்பட்டது.)
* தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இடங்களில் நெகிழ்வு தன்மை வரவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நம் நாட்டை நோக்கி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வருகின்றன. அவை தமிழகத்துக்கு வரும்போது, குறிப்பாக மின்னணு தொழிற்சாலை வரும்போது, வேலை நேரங்களில் நெகிழ்வு தன்மையை எதிர்பார்க்கின்றன.
தவிர, அரசு இதை உடனடியாக கொண்டுவரவில்லை. உயர்நிலை குழு அமைத்து, முழுமையாக விவாதித்து, தமிழக அரசின் கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்கள் 12 மணி நேரம் வேலை செய்யலாம். எல்லோருக்கும் 12 மணி நேரம் வேலை என்பது கிடையாது. குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இந்த சட்டத் திருத்தம் பொருந்தும். பணியாளர்கள் தன்னார்வ அடிப்படையில், ‘நாங்கள் 12 மணி நேரம் செய்துவிட்டு, வாரத்தில் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்கிறோம்’ என்று விரும்பி வந்தால் அவர்களுக்கு பொருத்தமாக அமையும். வேலை, சூழல் தளம், குளிரூட்டப்பட்ட வசதி, வந்து செல்லும் தூரம், தங்குமிட வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டுதான் 12 மணி நேரம் அனுமதிக்கப்படும்.
* நாகை மாலி: தொழில் துறை அமைச்சர் விருப்பப்பட்டு வேலை செய்பவர்கள் செய்யலாம் என்றார். அதற்காகத்தான் மிகைநேர சட்டம் உள்ளது.
* அமைச்சர் சி.வி.கணேசன்: தேவைப்படும் நிறுவனம், தொழிற் சாலைகளுக்கு விதிவிலக்கு அளித்து, தொழிலாளர்களுக்கு பாதிப்பின்றி செயல்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்.
(பின்னர், கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச வாய்ப்பு தரப்பட்டது. அவரது பேச்சை வேல்முருகன் எதிர்த்தார்.)
* அவை முன்னவர் துரைமுருகன்: இது குழப்பமான விஷயம்தான். தொழிற்சங்கங்கள் உரிமை போய்விடும் என்று பயப்படுகின்றன. தோழமை கட்சிகள் எங்களோடு எல்லாவற்றிலும் இருப்பவர்கள். இந்த சட்டத்தின் மூலம் நாளை பிரச்சினை வந்தால், தொழிலாளர்களின் பிறப்புரிமையான 8 மணிநேர வேலை என்பதில் கைவைக்க மாட்டோம். அதுதான் திமுகவின் அடிப்படை கொள்கை. இதில் பிரச்சினை என முதல்வரின் கவனத்துக்கு வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் எங்களை நம்புங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து, எதிர்ப்பை மீறி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT