தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் அதிகரிப்பால் விபத்து அபாயம்
உத்தமபாளையம்: தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையோரம் விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை தமிழக - கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக (எண்:183) உள்ளது. இச்சாலை வழியே வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து பால், காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவில் கேரளாவுக்கு செல்கின்றன.
மேலும் சபரிமலையில் மகரவிளக்கு, மண்டல பூஜை வழிபாட்டு காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வழியே சென்று திரும்புகின்றனர். இந்த சாலை, கடந்த ஆண்டு அக்.1 முதல் இருவழிச் சாலையாக பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் புறவழிச் சாலையிலேயே மாவட்டத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி உள்ளது. குறிப்பாக வெளி மாவட்ட, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வழியாக வாகனங்களில் அதிகம் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களாகவே சாலையோர வர்த்தகம் அதிகரித்துள்ளது. ஹோட்டல், டீ கடை, பேக்கரி, தங்கும் விடுதி, பழ விற்பனையகம் என்று பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வாகனங்களில் வேகமாக செல்வோர் கவனத்தை ஈர்க்க சாலையோரம் பல இடங்களில் தங்கள் வர்த்தக விளம்பரங்களை வைத்துள்ளனர். இவை திருப்பங்களிலும், சாலைக்கு மிக அருகாமையிலும் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் நடந்து செல்வோருக்கும் விளம்பரங்கள் இடையூறாக உள்ளன. சாலையின் மையத்தில் பல இடங்களில் இரும்புத் தடுப்பு வைக்கப் பட்டுள்ளது. அந்த இடங்களில் பெரிய கனரக வாகனங்கள் திரும்பும் போது இந்த பலகைகளால் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இந்த விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் கூறுகையில், சாலைகளில் உள்ள திருப்பம், பக்கச்சாலை சந்திப்பு, செல்ல வேண்டிய வேகம் உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகளும், ஊர்களின் தூரம், அருகே உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தகவல்கள் பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. தற்போது தனியார் வர்த்தக விளம்பரங்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் அகற்ற வேண்டும் என்றனர்.
